363 கிராமங்களுக்கு ரூ.516 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம்; கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்


363 கிராமங்களுக்கு ரூ.516 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம்; கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 363 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்கு கனிமொழி எம்.பி நேற்று அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 363 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்கு கனிமொழி எம்.பி நேற்று அடிக்கல் நாட்டினார்.

கூட்டுக் குடிநீர் திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய 6 ஒன்றியங்களை சேர்ந்த 363 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.515 கோடியே 72 லட்சம் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிளையூரணி கிராமத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.515.72 கோடி மதிப்பிலான இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 5 லட்சம் மக்களுக்கு தண்ணீர் தரக்கூடிய வாய்ப்பு தொடங்கப்பட்டுள்ளது. பணிகளை 18 மாத காலத்துக்கு முன்பாக 12 மாதத்தில் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்ததாரர் கூறி இருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி பகுதிகளில் உள்ள 5 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்கப் போகிறது.

இந்த திட்டத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மறுபடியும் புணரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படும். மேலும் புதிதாக 62 தொட்டிகள், 40 சம்புகள் கட்டப்படும். அனைத்து அதிகாரிகளும் இணைந்து இந்த திட்டத்தை சிறப்பாக, விரைவாக முடித்து கொடுக்க வேண்டும். இதேபோல் சாத்தான்குளம், உடன்குடி பகுதிக்கு தனி குடிநீர் திட்டம் வேண்டும் என மாவட்ட கலெக்டர் கோரிக்கை வைத்திருக்கிறார். நிச்சயமாக அமைச்சர்களை சந்தித்து இதை செயல்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுப்போம் என மக்களுக்கு உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கீதாஜீவன்

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், "கடந்த ஆட்சியாளர்கள் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்காமல் குழாய்களை மட்டும் பதித்துவிட்டு சென்றார்கள். ஆனால் நம்முடைய முதல்-அமைச்சர், குடிநீர் நீராதாரங்களை உருவாக்கி வீடுகளுக்கு இணைப்பு கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படுகிறது. கிராமப்புறங்களில் குடிநீர் இல்லாமல் சிரமப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்றார்.

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், பல்வேறு வகையிலே நமது மாவட்டம் முழுவதும் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி இருக்கிறார். அந்தவகையில் சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கும் எல்லா கிராமங்களுக்கும் இதுபோன்ற குடிநீர் தருவதற்கான திட்டங்களை தருவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. குடிநீர் பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இந்த திட்டம் நடைபெற உள்ளது" என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதி அம்பாசங்கர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் ரகுபதி, மேற்பார்வை பொறியாளர் செந்தூர்பாண்டி, தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செல்வக்குமார், முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story