வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது அக்.31-ல் தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தன் மீதான மூன்று வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது அக்டோபர் 31-ல் பிறப்பிப்பதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். அவை சென்னை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில் தன் மீதான மூன்று வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பு, தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில்பாலாஜி உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டுதான் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அவற்றை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜிதாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் அக்டோபர் 31-ந் தேதி (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பிப்பதாக கூறி தீர்ப்பை தள்ளிவைத்தார்.