கோவில்பட்டியில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
கோவில்பட்டியில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்கப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற வாலிபரும் காயங்களுடன் தப்பினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த தச்சு தொழிலாளி பேச்சிமுத்து (வயது 32). இவர் தனது வேலை காரணமாக கடலையூர் ரோடு பகுதியில் உள்ள பழைய அரசு மாணவர் விடுதி அருகே சென்றார். அப்போது அங்கு இருந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் குரல் கேட்டுள்ளது. இதையடுத்து அவர் அந்தக் கிணறு அருகே சென்று பார்த்த போது உள்ளே ஒரு பெண் தண்ணீரில் பரிதவித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அவர் கிணற்றுக்குள் குதித்து அந்தப் பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அந்த கிணற்றி லிருந்து மேலே ஏறுவதற்கு படிகள் எதுவும் இல்லை என்பதால் இருவரும் வெளியே வர முடியாமல் பரிதவித்துள்ளனர். இருவரது கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் கோவில்பட்டி தீயணைப்பு அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண் குடும்ப பிரச்சினை காரணாக கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். மீட்கப்பட்ட இருவருக்கும் காயம் இருந்ததால், அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.