ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி: அரியானா ஆண்கள், பெண்கள் அணிகள் 'சாம்பியன்'
ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டியில் அரியானா ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடத்தை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி வென்றது.
ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டியில் அரியானா ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடத்தை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி வென்றது.
கபடி போட்டிகள்
உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் தேசிய அளவில் 6-வது ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டிகள் கடந்த 3 நாட்களாக மதுரையில் நடந்தது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேசம், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும் கலந்து கொண்டன.
அதில் லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி கடந்த 2 நாட்களாக நடந்த லீக் சுற்றின் முடிவில் ஆண்கள் பிரிவில் அரியானா, ராஜஸ்தான், சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இமாச்சலப்பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
அரையிறுதி போட்டி
அதை தொடர்ந்து நேற்று காலை ஆண்களுக்கான அரையிறுதி போட்டி நடந்தது. இதில் அரியானா அணி, ராஜஸ்தான் அணியை 40-37 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சண்டிகார் அணியை 60-42 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதியில் வெற்றி பெற்ற அணிகள் இறுதி போட்டியில் மோதின.
அதன்படி மாலையில் இறுதி போட்டிகள் தொடங்கின. போட்டியை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டியின் முடிவில் அரியானா அணி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 47-40 என்ற புள்ளி கணக்கில் வென்று கோப்பை தட்டி சென்றது.
பெண்கள் பிரிவு
பெண்களுக்கான போட்டியில் அரியானா அணி பீகார் அணியுடன் மோதியது. இதில் 62-31 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போன்று இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மற்றும் இமாச்சலப்பிரதேசம் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 48-42 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது.
பின்னர் நடந்த இறுதி போட்டியில் அரியானா அணி தன்னை எதிர்த்து விளையாடிய இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 40-33 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
அரியானா அணி சாம்பியன்
போட்டியின் முடிவில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்ற அரியானா ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், ராஜஸ்தான் மாநில கபடி தலைவர் தேதஸ்விகெலாட் உள்ளிட்ட பலர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கினார்கள். மேலும் 2-ம் இடத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய விளயைாட்டு மேம்பாட்டு அணி பெற்றது. 3-வது இடத்தை ஆண்கள் பிரிவில் சண்டிகார், ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் பீகார், இமாச்சலப்பிரதேசம் அணியும் பிடித்தது. அந்த அணிகளுக்கும் கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு கபடி தேர்வு குழு சேர்மன் மனோகரன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் குமரேசன், ரஞ்சித்குமார் மற்றும் பி.எஸ்.என்.எல். செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணி வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஈரானில் நடைபெறும் உலக கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.