ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
காங்கயம்:
ஊதியூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
ஊதியூர் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி வெள்ளையகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி கீதா (வயது 42). இவர் நேற்று முன்தினம் நிழலி அப்பியாம்பாளையத்தில் திருமண விசேஷத்திற்கு செல்வதற்காக தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
காலை 7.45 மணியளவில் வெள்ளியம்பாளையம் சங்கிலியின்காட்டு மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது இவருக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்களில் 2 ஆசாமிகள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கீதாவிடம் டவுனுக்கு செல்லும் சாலை எது என்று கேட்டுள்ளனர்.
அப்போது கீதா ஸ்கூட்டரை நிறுத்தி வழி சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஆசாமிகள் கீதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயின், மற்றொரு 4 பவுன் செயின், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தாராபுரம் சாலையில் சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து கீதா அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். பட்டப்பகலில் வழிகேட்பது போல் நடித்து பெண்ணிடம்நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.