சாலையோரத்தில் கொட்டப்படும் இளநீர் கூடுகள்


சாலையோரத்தில் கொட்டப்படும் இளநீர் கூடுகள்
x

கொற்கை ஊராட்சியில் சாலையோரத்தில் கொட்டப்படும் இளநீர் கூடுகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கொற்கை ஊராட்சியில் சாலையோரத்தில் கொட்டப்படும் இளநீர் கூடுகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எச்சரிக்கை பலகை

கும்பகோணம் பகுதியில் கொற்கை ஊராட்சி உள்ளது. இந்த கொற்கை ஊராட்சி மெயின் ரோட்டில் காளிமுத்து நகர் அருகே சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வந்தன.

இதனை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொற்கை ஊராட்சி சார்பில் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் இங்கு குப்பைகளோ, கழிவுகளோ கொட்டக்கூடாது. பள்ளிக் குழந்தைகள் அருகில் உள்ளனர். மீறினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இளநீர் கூடுகள்

இதன் காரணமாக சிறிது காலம் அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படாமல் இருந்து வந்தது. தற்போது மீண்டும் அந்த பகுதியில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக சிலர் இளநீர் கூடுகளை மொத்தமாக சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் சாலை ஓரத்தில் ஆங்காங்கே இளநீர் கூடுகள் குவிந்து கிடக்கிறது.

விபத்து ஏற்படும் அபாயம்

இந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இளநீர் கூடுகள் சாலையின் வளைவு பகுதியில் குவிந்து கிடக்கிறது. இதனை அறியாமல் இரவு நேரங்களில் வருபவர்கள் இளநீர் கூடுகளால் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள், இளநீர் கூடுகளை அகற்றவும், அவற்றை கொட்டி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


Next Story