கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன் பேட்டி


கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x

பள்ளி மாணவி ஸ்ரீமதி சாவு குறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி. இவர் கடந்த 13-ந்தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இந்நிலையில் இறந்து போன மாணவியின் வீட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று அவர்களின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அதையடுத்து கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மர்ம முடிச்சுகள்

ஸ்ரீமதியின் இறப்பு கொடுமையான சம்பவம். இதில் ஏராளமான கேள்விகள், மர்ம முடிச்சுகள் உள்ளன. ஸ்ரீமதியின் தாய்க்கு 13-ந்தேதி காலை பள்ளி நிர்வாகம் தகவல் கொடுக்கிறது. அவர்கள் வருவதற்குள் பள்ளி நிர்வாகம் கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரி பிணவறையில் ஸ்ரீமதியின் உடலை வைத்துள்ளனர்

விபத்து நடந்திருந்தால், அங்கு போலீசார் வர வேண்டும். போலீசார் வந்து தான் அந்த உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வார்கள். ஆனால் பள்ளி நிர்வாகமே ஸ்ரீமதியின் உடலை எடுத்துச் சென்று வைத்துள்ளனர். போலீசார் வராமல், மாணவியின் உடலை ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு சென்றதை டாக்டர்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

அறிகுறி இல்லை

14-ந்தேதி காலை மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனையில் ஸ்ரீமதியின் உடலில் நிறைய சிராய்ப்பு காயங்கள் உள்ளது. மார்பகங்களில் பக்கத்தில் மேலே, கீழே காயங்கள் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளது.

இதை பார்த்தால் மாணவி மாடியில் இருந்து கீழே குதித்ததாக அறிகுறி இல்லை. மேலே இருந்து குதித்து இருந்தால் காலோ, கையோ அடிபட்டிருக்கும். மேலே இருந்து குதித்து இறந்தார் என்பதற்கான அறிகுறி இல்லை.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இந்த சம்பவத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இது மட்டும் போதாது. இந்த சாவை மறைப்பதற்கு முழு பங்கு ஆற்றியுள்ளார்கள். அவர்களையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறேன்.

கைது தவறானது

தமிழக முதல்-அமைச்சர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாணவியின் இறப்பு குறித்து யாரும் விசாரணை செய்யாமல், அந்த பள்ளி வாகனம் மற்றும் கட்டிடம் எரித்தவர்களை தான் மும்முரமாக விசாரணை செய்து வருகின்றனர். அப்பாவி இளைஞர்களை கைது செய்வது தவறானது.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.


Next Story