புளிய மரத்தில் கார் மோதி கபடி வீரர் பலி


இலுப்பூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் கபடி வீரர் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த 7 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை

புளிய மரத்தில் கார் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள அகரப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 38), கபடி வீரர்.

இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (36), சரவணன் (36), மதி (35), ஆனந்தன் (38), வெள்ளைச்சாமி (32), மாரிமுத்து, கண்ணன் ஆகியோருடன் ஒரு காரில் விராலிமலை- அன்னவாசல் சாலையில் சென்று கொண்டு இருந்தார். காரை திருப்பதி ஓட்டினார்.

இவர்களது கார் இலுப்பூர் குடிசை மாற்றுவாரியம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோர புளிய மரத்தில் மோதியது.

கபடி வீரர் பலி; 7 பேர் படுகாயம்

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பலத்த காயம் அடைந்த கபடி வீரர் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த 7 பேரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story