கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்வாரும் பணி; கனிமொழி எம்.பி.- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்


கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்வாரும் பணி; கனிமொழி எம்.பி.- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பாசன கால்வாய்

தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகப்பெரிய குளம். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்த குளத்தின் கரை மற்றும் பாசன கால்வாய்களை பலப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த வருடம் பெய்த மழையில் பொதுமக்களும், விவசாயிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எம்.பி.-அமைச்சர் தொடங்கி வைத்தனர்

இந்த திட்டத்தின் மூலம் கடம்பாகுளம், கால்வாய் குளம், தென்கரைகுளம் மற்றும் வெள்ளூர் குளங்களின் கரையை பலப்படுத்துதல், கால்வாய் குளத்தில் முன்புற கரை அமைத்தல், குளங்களின் மடைகளை திரும்ப கட்டும் பணிகள், குளங்களின் மறுகாலை மறுசீரமைத்தல், கடம்பா உபரிநீர் வடிகால் ஓடையில் புதியதாக 16 உள்வாங்கிகள் கட்டும் பணிகள், குறுகிய மற்றும் சிறிய பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெற உள்ளன.

இந்த பணிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் தலைவர் ஜனகர், கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற்பொறியாளர் மாரியப்பன், தென்திருப்பேரை நகரப்பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை ஆனந்த் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story