கடம்பூர் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க.கைப்பற்றியது
கடம்பூர் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க.கைப்பற்றியது. துணைத்தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கடம்பூர்:
கடம்பூர் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. துணைத்தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டார்.
தி.மு.க. கைப்பற்றியது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட 9 வார்டுகளுக்கான தேர்தல், கடந்த 29-ந்தேதி நடந்தது. தொடர்ந்து கடந்த 1-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.
தொடர்ந்து நேற்று காலையில் கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் 2-வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி வேட்பு மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
துணைத்தலைவர் தேர்வு
பின்னர் மதியம் நடந்த பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7-வது வார்டு கவுன்சிலர் மாரீஸ்வரி வேட்பு மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்வானார்.
பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோருக்கு சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல் காசிம் வழங்கினார். கடம்பூர் பேரூராட்சி நிர்வாக அலுவலர் வெங்கடேஷ், வட்ட வழங்கல் அலுவலர் லிங்கராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.