கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படும்:கலெக்டர்


கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் 3   கட்டங்களாக நடத்தப்படும்:கலெக்டர்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 3:59 PM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

ஆய்வுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பணிக்குழு அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகள் அருகே உரிய விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் தொடங்கும் நாளுக்கு முன்ேப ரேஷன் கடை விற்பனையாளர்கள், குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் பதிவு செய்ய முகாமிற்கு வர வேண்டிய நாள், நேரம் மற்றும் குடும்ப அட்டை எண்ணை அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்து வழங்குவார்.

விண்ணப்பம் பதிவு செய்வது எப்படி?

ஒரு நபர் பல விண்ணப்பங்களை கொண்டு வந்து முகாமில் பதிவு செய்ய இயலாது. விண்ணப்பத்தினை அந்த குடும்பத் தலைவியே, அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகாமில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகியவற்றுடன் சமர்ப்பித்து கைவிரல் ரேகை பதிவுகள் மூலம் பதிவுகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பப்பதிவு முகாமில் ஒரு பொறுப்பு அலுவலர், விண்ணப்ப பதிவு தன்னார்வலர் பணியில் இருப்பார்கள். மேலும் முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆவணங்கள் சரிபார்த்து வழங்க ஒரு உதவி தன்னார்வலரும் பணி அமர்த்தப்படுவார்.

முகாம்களுக்கு பாதுகாப்பு

இந்த முகாம்களை மண்டல அலுவலர்கள், மேற்பார்வை அலுவலர்கள் தினமும் பார்வையிட்டு பொதுமக்கள் எளிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முகாமில் ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாத விளிம்பு நிலையில் உள்ள பொதுமக்களில் யாரேனும் வருகை புரிந்தால் அவர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து அவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பங்கேற்க தாசில்தார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து முகாம்களிலும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தடுப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்கொள்ள வேண்டும்.

பதிவு முகாம்கள்

விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாள்கள் மற்றும் மேல் விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க 10 தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

விண்ணப்ப பதிவு முகாம்கள் 3 கட்டங்களாக நடக்கிறது. முகாம் நேரம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் ஞாயிற்று கிழமைகளிலும் முகாம் நடைபெறும். இந்த முகாம் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள் குறித்து விரிவான விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்' என்று கூறினார்.


Next Story