பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
பரமக்குடியில் சித்திரை திருவிழாவையொட்டி பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் சித்திரை திருவிழாவையொட்டி பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொட்டும் மழையில்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதையொட்டி தினமும் காலை, மாலை யாகசாலை பூஜைகள், பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலுக்குள் புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்வான பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. அதையொட்டி பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு பச்சை பட்டு உடுத்தி, வெள்ளி கிண்ணத்தில் தயிர் சாதம் சாப்பிட்டு பூப்பல்லக்கில் எழுந்தருளி ஏராளமான தீவட்டி வெளிச்சத்தில் அதிகாலை 3.50 மணியளவில் கொட்டும் மழையில் வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு கள்ளழகரை தரிசித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மண்டகப்படிகளுக்கு சென்றார். அங்கு அவருக்கு விசேஷ தீபாராதனைகள் நடந்தது.
ஆயிரம்பொன் சப்பரம்
பின்பு தல்லாகுளம் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் பீச்சாங் குழல் மூலம் மஞ்சள் நீரை கள்ளழகர் மீது பீய்ச்சினர். பின்பு கள்ளழகர் தல்லாகுளத்தில் இருந்து மேலசத்திரம், காட்டுப் பரமக்குடி, மஞ்சள்பட்டினம் சென்றார். பின்பு மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது.
அங்கிருந்து புறப்பட்டு நகராட்சி, பெரிய கடை பஜார், காந்திசிலை வழியாக இரவில் வண்டியூர் என்னும் காக்கா தோப்பை வந்தடைந்தார். அங்கு பதினெட்டாம் படி கருப்பண சுவாமிக்கு காட்சி அளித்து மண்டபத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு மஞ்சள் காப்பு சாற்றும் நிகழ்வு நடந்தது. முன்னதாக ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
பச்சைப்பட்டு
கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும், விவசாயம் செழிக்கும், நாடு செழிக்கும், வியாபாரம் நன்கு நடைபெறும், மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானங்களும், நீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், டிரஸ்டிகள் பாலமுருகன், நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் ஆகியோர் செய்திருந்தனர்.