காளியம்மன் கோவில் திருவிழா
பெரும்பாறையில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறையில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 44-வது ஆண்டு திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு அழகாய் ஊற்றில் இருந்து அம்மன் கரகம் அலங்கரித்து கரகாட்டம், வான வேடிக்கையுடன், மேளதாளம் முழங்க அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 2-வது நாளான நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அலகு குத்தி காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்றைய தினம் இரவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
3-வது நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மேளதாளம் முழங்க கரகாட்டம் ஆடி பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராடி, வான வேடிக்கையுடன் பெரும்பாறை மெயின் ரோடு, புதூர், குத்துக்காடு வழியாக அம்மன் வீதி உலா நடந்தது. வழிநெடுகிலும் குடங்களில் தண்ணீர் ஊற்றி, வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இரவு 7 மணிக்கு அம்மன் பூஞ்சோலை வந்தடைந்தது. இந்த விழாவில் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர், கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.