கள்ளக்குறிச்சி : பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணை
கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மீது விழுப்புரம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் இவ்வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஒரு நாள் காவலில் எடுத்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிபதி புஷ்பராணியின் உத்தரவின்பேரில் அவர்கள் 5 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி வக்கீல் ராமச்சந்திரன் மூலமாகவும், பள்ளி முதல்வர் சிவசங்கரன் தனக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் சீனிவாசன் மூலமாகவும் தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
எனவே இந்த வழக்கு கடந்த ஜூலை 29ம் தேதி விசாரணைக்கு வந்தது .அதில் இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் உள்ளதால் ஏற்கனவே தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனுவை ஏற்க முடியாது.சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்த தகவல் அறிக்கையினை தாக்கல் செய்ய பள்ளி தரப்பு வக்கீலுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த மனு மீதான விசாரணை வருகிற 1-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மனுவானது ஆகஸ்ட்1-ந் தேதி விசாரணைக்கு வந்தது, கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஜாமின் வழங்க கூடாது என மாணவியின் தாயார் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மீது விழுப்புரம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.