வருகிற 11-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் இடையூறு செய்யக்கூடாது கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு பேட்டி
வருகிற 11-ந்தேதி நடைபெற இருக்கும் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இடையூறு செய்யாமல் ஒதுங்கி இருக்கவேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு கூறினார்.
பேட்டி
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அ.தி.மு.க. வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் கட்சிக்கு இரட்டை தலைமை தேவை இல்லை. ஒற்றை தலைமை தான் தேவை என கூறி வருகிறார்கள்.
நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வேதா இல்லத்தை தீபா, தீபக் ஆகியோர் விற்க இருக்கிறார்கள் அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமியிடம்ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக சொல்லி வருகிறார்கள். இது அப்பட்டமான பொய். எடப்பாடி பழனிசாமியின் பேருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பொய் சொல்கிறார்கள். இதை கள்ளக்குறிச்சி மாவட்டம் அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
இடையூறு செய்யக்கூடாது
ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்று செயற்குழு, பொதுக்குழு நடத்த விடாமல் தடை வாங்கி உள்ளார். 4,665 செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்களில் 4,500 பேர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உள்ளார்கள். வருகிற 11-ந் தேதி நடைபெற இருக்கும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் இடையூறு செய்யக்கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 49 செயற்குழு, பொதுக்குழு உள்பட அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.பிரபு, நகரசெயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.