கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்ரேஷன் கடை பணியாளர்கள் ஒருநாள் விடுப்பு போராட்டம்
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். பெண் பணியாளர்களை பாலியல் தொந்தரவு செய்யும் நாகை மண்டல இணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும்.
இரண்டு முறை பதிவு செய்வதை ரத்து செய்து ஒரு பதிவில் இரண்டு குறுஞ்செய்தி செல்ல ஆவணம் செய்ய வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
போராட்டம்
அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட இணை செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ராஜகோபால், ஜெகதீஸ்வரி, அமலா, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ரேஷன் கடை பணியாளர்களின் இந்த போராட்டத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஒரு சிலர் ரேஷன் கடை வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றதாக மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.