கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சியில் உள்ள பொது இடங்கள், தெருக்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான 60 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது மற்றும் 5-வது வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதன்படி கச்சிராயப்பாளையம் கோமுகி அணையில் கரைப்பதற்காக கள்ளக்குறிச்சி நகரில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட 60 விநாயகர் சிலைகள் கள்ளக்குறிச்சி மந்தைவெளிக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் மதியம் 2 மணியளவில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு டிராக்டர், மினிலாரி, லாரி உள்ளிட்ட வாகனங்களில் கோமுகி அணைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து கோமுகி அணையில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன. முன்னதாக ஊர்வலத்தில் போது, சிறுவர்கள் விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், காளி உள்ளிட்ட வேடமணிந்து வந்திருந்தனர். மேலும் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கச்சிராயப்பாளையம்
இதேபோல் கச்சிராயப்பாளையம், மண்மலை, கரடிசித்தூர், அக்கராயப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கச்சிராயப்பாளையம் கோமுகி அணையில் கரைக்கப்பட்டன. இதில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.