கள்ளக்குறிச்சியை முன்மாதிரி மாவட்டமாக உருவாக்க வேண்டும்


கள்ளக்குறிச்சியை முன்மாதிரி மாவட்டமாக உருவாக்க வேண்டும்
x

அனைத்துத்துறை அலுவலர்களும் வேளாண்மை தொடர்பான திட்டப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு கள்ளக்குறிச்சியை முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, கலெக்டர் ஷ்ரவன் குமார், விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்மாதிரி மாவட்டமாக...

கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடைபெற்றுவருகிறது. எனவே இத்துறை சார்ந்த முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு அனைத்துத்துறை அலுவலர்களும் செயல்பட்டு வேளாண்மை தொடர்பான திட்டப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு ஒரு முன்மாதிரி மாவட்டமாக உருவாக்கிட வேண்டும். மாவட்ட கலெக்டர் வேளாண்மைத்துறையின் சார்பாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு அரசின் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு விரைந்து கொண்டு சேர்த்திடும் பணியை மேற்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை அடைகிறதா? என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புள்ளிவிவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்

தொடர்ந்து பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்டத்தில் மலைப்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுவதால் சிறுதானிய சிறப்பு மண்டலங்களாக கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வருகிறது. சொட்டுநீர் பாசன திட்டத்தை முழுமையாக விவசாயிகளுக்கு கொண்டு சேர்த்திடும் பணியை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். கல்வராயன்மலைபகுதியில் மலைப்பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் அனைத்து வேளாண் தொடர்புடைய திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுவதுமாக கொண்டு சேர்த்திட முழு அர்ப்பணிப்புடன் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என்றார்.

வேளாண்மை விரிவாக்க மையம்

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து திருக்கோவிலூர் மற்றும் திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்ட களமருதூர், சேந்தநாடு, மாடாம்பூண்டி, மணலூர்பேட்டை ஆகிய கிராமங்களில் தலா ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் கல்வெட்டை திறந்து வைத்த அவர்கள் 183 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் நலத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், கூடுதல் சர்க்கரைத்துறை ஆணையர் அன்பழகன், வேளாண்மை பொறியியல்துறை தலைமை பொறியாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story