கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அணி நிர்வாகிகள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளார்கள் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.அறிக்கை
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அணி நிர்வாகிகள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளார்கள் என வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின் பேரில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. புதிய அணி நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது இளைஞரணி, மகளிர் அணி, இளைஞர் மாணவரணி, தகவல் தொழில் நுட்ப அணிகள் நகராட்சி, ஒன்றியம், பேரூர் கழகம், பூத்கமிட்டி அளவிலும், மருத்துவரணி தவிர பிற அனைத்து அணிகளும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அளவில் செயல்பட வேண்டும். மருத்துவரணி மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் செயல்படும். வயது வரம்பின் காரணமாக இளைஞரணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணியில் மட்டும் மாவட்ட அளவில் அணி தலைவர் பதவி உருவாக்கப்படவில்லை. பிற அனைத்து சார்பு அணிகளிலும் மாவட்டத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளை கவுரவ அடிப்படையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளில் நியமனம் செய்தும், சிறப்பாக செயல்பட கூடியவர்களை அமைப்பாளர்களாகவும், துணை அமைப்பாளர்களாகவும் நியமனம் செய்ய வேண்டும். அணி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு பொதுக்குழு அந்தஸ்து இல்லை. அனைத்து அணிகளும் நகராட்சி அளவில் ஒரு அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்களை கொண்டிருக்க வேண்டும். பேரூராட்சி அளவில் ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்களை கொண்டிருக்க வேண்டும். பூத் கமிட்டி அளவில் செயல்படும் அணிகள் ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்களை கொண்டிருக்க வேண்டும். (பேரூராட்சி வட்டங்களில் 2 அமைப்பாளர்கள் இருக்க வேண்டும்). புதியவர்கள் கட்சியில் பணியாற்ற துடிப்பானவர்கள், மாவட்ட தேர்தலின் போது வாய்ப்பு கிடைக்காதவர்கள் என அனைத்து தரப்பினரும் பரிசீலிக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்புகள் முழுமையாக நிரப்பப்பட்டு பட்டியல் வருகிற 31-ந் தேதிக்குள் தலைமைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டி உள்ளதால் அணி நிர்வாகிகள் பதவிகளுக்கு விருப்பமுள்ள கட்சியினர் விருப்ப மனுவை மாவட்ட செயலாளரிடம் விரைந்து கொடுக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.