பூப்பல்லக்கில் கள்ளழகர் வீதி உலா
சின்னாளப்பட்டியில் பூப்பல்லக்கில் கள்ளழகர் வீதி உலா சென்றார்.
சின்னாளப்பட்டியில் சித்திரை திருவிழாவின் இறுதி நாளான நேற்று பூப்பல்லக்கில் கள்ளழகர் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கள்ளழகர் கருப்பு உடை அணிந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நகரின் முக்கிய சாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் வீதி உலா சென்றார். பின்னர் பிருந்தாவன அழகர் தோப்பை அடைந்ததும் வீதி உலா நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கிடையே கள்ளழகரை சுமந்து வந்த பூப்பல்லக்கின் பாகங்களை பக்தர்கள் உடைத்து எடுத்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர். அடுத்த ஆண்டு வரை அந்த பாகங்களை பத்திரமாக வைத்திருந்தால் நல்ல காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதற்காக தான் அந்த பாகங்களை பக்தர்கள் எடுத்துச்சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு அரிசி புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.