கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவா்கள் கோரிக்கை மனுவினை கலெக்டரிடம் கொடுத்தனர்.
பல்வேறு கோரிக்கைகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக நேற்றும் அவர்களது வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் நந்தகுமார் தலைமையில், செயலாளர் சத்தியராஜ், பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலையில், அச்சங்கத்தினர் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கற்பகத்தை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர். அதில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் குத்தகை ஏலம் சரியாக ஆண்டு தோறும் நடத்தப்படாததால் கிரஷருக்கு தேவையான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு தொழில் சரியாக நடைபெறவில்லை.
குத்தகை ஏலம்
குத்தகை ஏலம் ஒவ்வொரு நிதி ஆண்டும் தவறாமல் நடத்த வேண்டும். குத்தகை மற்றும் நடை சீட்டு மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.20 கோடி அளவுக்கு வருவாய் வரும். குத்தகை ஏலம் முடிந்த பின் மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற குறைந்தது ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டு வரை ஆகிறது. அதுவரை ஏலம் எடுத்த ஏலதாரர் குத்தகை கட்டணம் செலுத்தி விட்டு காத்திருக்க வேண்டி இருப்பதால் தொழில் செய்ய முடிவதில்லை. ஆதலால் அந்த ஆணை அனுமதியை 3 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டல் விடுத்து தொழில் நடத்த விடாமல் இடையூறு செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் எங்களது கல்குவாரி மற்றும் கிரசர் தொழிலானது விவசாயத்திற்கு அடுத்தபடியாக நடைபெறும் மிகப்பெரிய அத்தியாவசிய தொழிலாகும்.
42 கல்குவாரிகள்- 85 கிரஷர்கள்
இதில் தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் இந்த தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொடா்ந்து இடையூறு இல்லாமல் தொழிலை நடத்த தமிழக அரசு ஆதரவு தர மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தால் 42 கல்குவாரிகள், 85 கிரஷர்கள் இயங்காததால் தினமும் சுமார் ரூ.1 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேரிடையாக 6 ஆயிரம் பேரும், மறைமுகமாக 10 ஆயிரம் பேரும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.