கல்யாண தீர்த்த கோடி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு...!


கல்யாண தீர்த்த கோடி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு...!
x

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கல்யாண தீர்த்த கோடி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் பிரசித்திபெற்றது அகஸ்தியர் அருவி. இவ்வருவிக்கு மேல் இருக்கும் கல்யாண‌ தீர்த்தத்தில் லோகநாயகி சமேத கோடி லிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் அகஸ்தியர், அவரது மனைவி லோபமுத்ராவுடன் ரதத்தில் நின்ற நிலையில் சிலை அமைக்கப்பட்டு இருந்தது.

இங்கு சிவபெருமான் திருமண கோலத்தில் அகஸ்தியருக்கு பிரத்யேகமாக காட்சியளித்தார். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்குவந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். மேலும் ஆலயங்களுக்கு இங்கிருந்து புனித நீர் எடுத்து செல்வது வழக்கம்.

பவுர்ணமியன்று மாதம்தோறும் சிறப்பு பூஜை நடைபெரும் அச்சமயம் சந்தனமழை பொழியும் என்பது ஐதீகம். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டவெள்ளத்தின் போது அகஸ்தியர் மற்றும் லோபமுத்ரா சிலைகள் அடித்துச் செல்லப்பட்டு கோவில் சேதமானது.

தொடர்ந்து புதிதாக அகஸ்தியர்-லோபமுத்ரா சிலையை நிறுவ பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் இங்கு ஆய்வு செய்த அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவும் விரைவில் சிலைகள் நிறுவப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து அமெரிக்காவில் பணிபுரியும் சென்னை சேர்ந்த ஒருவர் தனது சொந்த முயற்சியால் பல லட்சம் செலவில் அறநிலையத்துறை அனுமதியுடன் கல்யாண தீர்த்தத்தில் அகஸ்தியர்-லோபமுத்ரா சிலையை நிறுவும் முயற்சியை எடுத்தார். தொடர்ந்து கோவில் முற்றிலும் சீரமைக்கப்பட்டு புது மண்டபம் கட்டப்பட்டு கலைநயத்துடன் பிரகாசமாககட்டப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலையில் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, நவகிரக ஹோமம், மகாபசுமி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது மாலையில் விசேஷ சந்தி, அங்குரார்பணம், ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், முதற்கால யாகபூஜை, திரவயா குதி, பூர்ணாகுதி தீபாராதனை நடைற்றது.

இதனை தொடரந்து இன்று காலை இரண்டாம் கால யாகபூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், ஸ்பரிஷா குதி, கடப்புறப்பாடு விமானம் மற்றும் மூலஸ்தானம் லோகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அகஸ்தியர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story