காமராஜர் நினைவிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
காமராஜர் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் நினைவிடமானது கோடிக்கணக்கான மக்களுக்கு புனித இடம். தமிழகத்தில் பொற்கால ஆட்சி செய்த பெருமை அவருக்கு உண்டு. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் புகழ் மிக்க தலைவராக விளங்கியவர் காமராஜர். மேலும் முதல்-அமைச்சராக இருந்து நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு தன்னலம் கருதாமல் பொது நலன் கருதி வாழ்ந்தவர் காமராஜர்.
அந்த வகையில் பெருந்தலைவரின் நினைவிடமானது இன்றைய தலைமுறையினருக்கும், வருங்கால சந்ததியினருக்கும் நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை கற்றுக்கொடுக்கின்ற நினைவிடமாக திகழ்கிறது. எனவே பெருந்தலைவரின் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்காமல் இருக்க முடியாது. குறிப்பாக ஆட்சிகள், கட்சிகள், கூட்டணி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தை முறையாக பராமரிப்பது அவசியமானது. அதனை முறையே செய்ய தவறிய தமிழக அரசு கடமை உணர்வோடு முறையாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களுடைய நினைவிடத்தை உரிய முறையிலே பராமரிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.