கம்பம் அரசு மருத்துவமனையில்தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு
கம்பம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில், தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 174 படுக்கைகள் மற்றும் 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் 'சீமாங்' சென்டர் உள்ளது. இந்த மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து அதிக மதிப்பீடு பெறும் வகையில் கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு, தொற்றாநோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்த வங்கி, எக்ஸ்-ரே, ஆய்வகம், உணவகம் உள்பட 14 பிரிவுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் நேற்று மத்திய அரசின் தேசிய தரச்சான்றிதழ் குழுவினர் கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இந்த குழுவில் பல்லவி அண்ணாராவ் ரெட்டி (மகாராஷ்டிரா), சவுமியா (கேரளா), ரேணுபர்மன் (அரியானா), பாராசபீ (காஷ்மீர்) ஆகியோர் இருந்தனர். இவர்கள் நேற்று முதல் நாளை (சனிக்கிழமை) வரை ஆய்வு மேற்கொண்டு இறுதி தர மதிப்பீடு செய்ய உள்ளனர். இதில் 14 பிரிவுகளிலும் ஒவ்வொரு துறைக்கும் சராசரியாக 70 மதிப்பெண் பெற வேண்டும். அவ்வாறு பெறும் பட்சத்தில் ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.17 லட்சத்து 40 ஆயிரம், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் பரிமளாசெல்வி, மருத்துவ அலுவலர் பொன்னரசன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.