சேலத்தில் கம்பன் கழக பொன்விழா நிறைவு-எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் பங்கேற்பு


சேலத்தில் கம்பன் கழக பொன்விழா நிறைவு-எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் பங்கேற்பு
x

சேலத்தில் நடைபெற்ற கம்பன் கழக 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் எடப்பாடி பழனிசாமி, ஜி. கே.வாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

சேலம்

கம்பன் கழக பொன் விழா

சேலம் கம்பன் இலக்கிய அறக்கட்டளை சார்பில் கம்பன் கழக 50-ம் ஆண்டு பொன்விழா நிறைவு தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ஏ.வி.ஆர். சுதர்சனம் தலைமை தாங்கினார். செயலாளர்கள் சுசீந்திரகுமார், ராமன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலை முதல் மதியம் வரை கவியரங்கம், சொல்லரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மாணவி விஷ்ருதாவின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை கம்பன் காட்டும் அரக்கர் உலகம் என்ற தலைப்பில், கம்பன் கழக செயலாளர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார்.

விழா மலர்

விழாவில் த.மா.கா. தலைவர் ஜி. கே.வாசன் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார். அதை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.

இதில் ஜி.கே. வாசன் பேசும் போது, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கம்பராமாயணம். ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்று கம்பராமாயணத்தில் கூறியிருப்பது போன்று சட்டம், ஒழுங்கு பாதிக்காமல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடந்தது. தூய்மைக்கு எடுத்துக்காட்டாக காமராஜர் ஆட்சி நடத்தினார். மீண்டும் தமிழக மக்களுக்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்றார்..

இளைய தலைமுறையினர்...

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, கம்பன் புகழ், கம்பராமாயணத்தின் சிறப்பு ஆகியவற்றை எடுத்துக்கூறுவதோடு, கம்பராமாயணத்தை பற்றி இளைய தலைமுறையினர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கம்பர் வழியில் தனித்தமிழ் நடையோடு அறநெறி சார்ந்த படைப்புகளை படைக்கும், படைப்பாளர்களையும், கம்பரின் சிந்தனையை அடுத்து தலைமுறையினர் இடையே பரப்புவோரையும், பாராட்டும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு கம்பர் விருதை அறிவித்தார். தமிழ் இலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி, கம்பர் படைப்பால் உச்சநிலையை அடைந்தது என்றார்..

பின்னர் பெரிதும் இரக்கத்திற்குரிய பாத்திரம் கைகேயியே, தாரையே, மண்டோதரியே என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது. இதில் இலங்கை ஜெயராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் முன்னாள் அமைச்சர் செம்மலை, ரகுநந்தகுமார், பி.முருகன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story