பாரம்பரிய நடனத்துடன் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலம்


பாரம்பரிய நடனத்துடன் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலம்
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பாரம்பரிய நடனத்துடன் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் பாரம்பரிய நடனத்துடன் கம்பட்டராயர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கம்பட்டராயர் பண்டிகை

கோத்தகிரியில் வாழ்ந்து வரும் கோத்தர் இன பழங்குடி மக்களின் குல தெய்வமான அய்யனோர்-அம்மனோர் கோவில், நேரு பூங்கா வளாகத்தில் உள்ளது. இந்த கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஆகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடை திறக்கப்பட்டு, கம்பட்டராயர் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பண்டிகை, கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள புது கோத்தகிரி கிராமத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி பிறை கழித்தல் என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி கிராம மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து அங்குள்ள கம்பட்டராயர் கோவில் முன்பு இரவு நேரத்தில் தீ மூட்டி அதை சுற்றி தங்களது பாரம்பரிய நடனம் ஆடி வழிபட்டு வந்தனர்.

கல் தூக்கும் நிகழ்ச்சி

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊர் பூசாரிகள் ரங்கன், மாயகிருஷ்ணன், லட்சுமணன் மற்றும் விரதம் இருந்த இளைஞர்கள் பலர் தங்களது கிராமத்தில் உள்ள கோவிலின் கூரையை புதுப்பிக்க வனப்பகுதிக்கு சென்று மூங்கில், இலை, தழைகளை சேகரித்து வந்தனர். பின்னர் கோவிலில் உள்ள சுமார் 100 கிலோ எடை கொண்ட கல்லை கடும் விரதம் இருந்து வந்த ஊர் பூசாரிகள் உள்பட மொத்தம் 11 பேர் தங்களது வலது கை நடு விரலை மட்டும் பயன்படுத்தி தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது 11 விரல்களால் மட்டும் அந்த கல் தூக்கப்படும். அப்போது அந்த கல் சுமார் 4 அடி முதல் 8 அடி உயரம் வரை நிலத்தில் இருந்து மேலே தூக்கப்படும் என்று கூறப்படுகிறது. தூக்கப்படும் உயரத்தை வைத்து, இந்த ஆண்டு கிராமம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பது ஐதீகமாக உள்ளது.

அன்னதானம்

இதையடுத்து மதியம் 2 மணி முதல் வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மூங்கில் உள்ளிட்டவற்றை கொண்டு கோவிலின் மேற்கூரையை புதுப்பித்தனர். பண்டிகையின் முக்கிய நாளான நேற்று காலையில் புதுகோத்தகிரி பூசாரிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் தங்களது பாரம்பரிய உடை அணிந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த குல தெய்வ கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஊர் பூசாரிகள் மற்றும் ஊர் நாட்டாமை முத்து கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆதி கோவில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றி தூபம் காட்டி கம்பட்டராயருக்கு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் கோவில் முன்புறம் உள்ள நடுகல்லை சுற்றி தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் கோவில் நடை மீண்டும் பூட்டப்பட்டது.

7 கோக்காலிலும் கொண்டாட்டம்

இன்று(திங்கட்கிழமை) புதுகோத்தகிரியில் உள்ள கோவிலில் சாமை அரிசி சோறு மற்றும் பட்டாணி, அவரை, தட்டப்பயிறு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட உப்பு சாம்பாருடன் நெய் சேர்த்து, கடவுளுக்கு பொங்கலிட்டு படைத்து வழிபாடு நடக்கிறது. அதன்பின்னர் கிராம மக்கள் அனைவருக்கும், அதே உணவு அன்னதானமாக வழங்கப்படுகிறது.

நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி குழுவாக பாரம்பரிய நடனம் ஆடி வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து கோவில் பூசாரிகள் கூறும்போது, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக எங்களது பாரம்பரிய பண்டிகையான கம்பட்டராயர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதுகோத்தகிரி கோக்காலில்(கோத்தர் இன மக்கள் வாழும் பகுதி) நடைபெறுவது போலவே, மாவட்டத்தில் உள்ள 7 கோக்காலிலும் பண்டிகை கொண்டாடப்படும் என்றனர்.


Next Story