கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்துக்காகமுல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு:அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்துக்காகமுல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு:அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக பாசனத்துக்காக முல்லைப்ெ்பரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசனப்பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இருபோக பாசனம் நடைபெறும் இந்தப் பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணை நீராதாரமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடைமழை பெய்து வருவதால் தற்போது அணையின் நீர்மட்டம் 118.45 அடியாக எட்டியுள்ளது. இதன் காரணமாக முதல் போக பாசனத்துக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தண்ணீர் திறப்பு

அவரது உத்தரவின்பேரில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.

இதில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடியும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 100 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அமைச்சர், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி வழிபட்டனர்.

முதல்போக பாசனம்

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கத்தமிழ்செல்வன், மதுரை நீர்வளத்துறை பெரியாறு-வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி, பெரியாறு வைகை வடிநில கோட்ட பொறியாளர் அன்புச்செல்வம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, தாசில்தார் சந்திரசேகர். நீரினைப் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் குமரேசன், கிருஷ்ணமூர்த்தி, சுகுமாரன் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

முதல் போக பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், தேனி தாலுகாவில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் நிலம், போடி தாலுகாவில் 488 ஏக்கர் நிலம் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

நெல் சாகுபடி

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்து பயன் அடைய வேண்டும். மழை பெய்யாமல் தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டால் முறை வைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். எனவே விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 118.45 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 155 கன அடியாகவும் இருந்தது.


Next Story