சிவசுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நேற்று சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நேற்று சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.
கந்தசஷ்டி லட்சார்ச்சனை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 58-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா நேற்று காலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இதையடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 30-ந் தேதி வரை 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற உள்ளது.
சூரசம்ஹாரவிழா
விழாவின் முக்கிய நாளான வருகிற 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வாணவேடிக்கையுடன் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சூரபத்மனை சாமி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பூர்த்தி ஹோமமும், இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ராதாமணி மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.