சுப்பிரமணிய சுவாமிகோவிலில் விரதம் மேற்கொள்ளும்பக்தர்களிடம் கனிமொழி எம்.பி குறை கேட்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் விரதம் மேற்கொள்ளும்பக்தர்களிடம் கனிமொழி எம்.பி குறை கேட்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கி கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களிடம் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் குறைகள் கேட்டறிந்தார்.
கந்தசஷ்டி விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருவிழா தொடக்கம் முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண பல்லாயிரம் பக்தர்கள் வருவார்கள்.
கனிமொழி எம்.பி.-அமைச்சர் ஆய்வு
இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், ஏற்பாடுகளை நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. தங்கி விரதம் இருக்கும் ஒவ்வொரு தற்காலிக கொட்டகைகளுக்கு சென்று பக்தர்களிடம் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டு, உங்களுக்கு வேண்டிய வசதிகளை கூறுங்கள் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்கிறோம் எனவும் கூறினார். பின்னர் அன்னதான மண்டபத்திற்கு சென்று பக்தர்களிடம் அன்னதானம் குறித்து கேட்டறிந்தார்கள். கோவில் வளாகத்தில் அமைக்கப்படுள்ள மருத்துவ முகாம், தற்காலிக கழிப்பறைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்த போது ஏராளமான பெண்கள் அவருடன் செல்பி எடுத்தனர். அவருக்கு, விரதம் இருக்கும் கிராமத்து பெண்கள் குலைவை விட்டு தங்களுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் அருள்முருகன், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், துணை தாசில்தார் பாலசுந்தரம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.