கான்கிரீட் தளம் அமைத்தால் விவசாயிகளை திரட்டி தடுப்போம்
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தொடங்கினால் விவசாயிகளை திரட்டி தடுப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்தின்போது பேசினார்.
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நத்தக்காடையூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசியதாவது:-
பவானிசாகர் அணையின் மூலம் 70 ஆண்டுகளாக தற்போதைய பாசன முறையை பயன்படுத்தி வந்துள்ளோம். இப்போது திடீரென்று கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இதனால் வேளாண் பெருமக்களுக்கு என்ன நன்மை என்று யாரும் சொல்லவில்லை.
200 கிலோ மீட்டர் சம மட்ட கால்வாய், 220 கிலோ மீட்டர் நீர் பகிர்மான கிளை கால்வாய்கள் உள்ளன. 32 டி.எம்.சி. தண்ணீரை அணையில் தேக்கி வைக்க முடியும். கசிவுநீர் பாசனம் மூலமாக மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கான்கிரீட் தளம் அமைத்தால் கசிவுநீர் பாசனம் கிடைக்காது.
மண்ணில் தண்ணீர் சென்றால் தான் நிலத்தடிநீர் உயரும். மண் அரிப்பு ஏற்பட்டால் பனை மரம் நடுங்கள். மரங்களை நடுங்கள். அதை விட்டு விட்டு கான்கிரீட் தளம் அமைப்பது உகந்தது அல்ல. மண் வளம் பெற்றால் தான் மக்கள் வளம் பெற முடியும்.
கான்கிரீட் தளத்தை கைவிடுங்கள்
மக்களுக்கான அரசு அமையாததால் மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். மீனவர்கள், மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போராடுகிறார்கள். ஊதிய உயர்வு, நிரந்தர பணி கேட்டு போராடுகிறார்கள். ஒப்பந்த ஊதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கிறார்கள். கான்கிரீட் தளம் அமைக்க துடிக்கும் ஆட்சியாளர்கள், அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் ஏன் அமைக்கப்படுகிறது என்பதை விளக்கி பேசி, தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக தெரிவிக்கிறார்கள். விவசாயிகள் எதிர்ப்பதால் அந்த திட்டத்தை இந்த ஆட்சியில் நிறுத்த வேண்டும். இது தொடக்க நிலை போராட்டம் தான். திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால், கிராமம் கிராமமாக விவசாயிகளை திரட்டி, திட்டத்தின் பின்விளைவுகளை எடுத்துக்கூறி தடுத்தே தீருவோம். இல்லாவிட்டால் கான்கிரீட் தளம் இருக்காது. திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் பெரும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும். அந்த நிலைக்கு அமைச்சர் துரைமுருகன் தள்ளமாட்டார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் ராவணன், இளைஞர் பாசறை செயலாளர் ஜெகதீஷ் பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், கட்டமைப்பு குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட தலைவர் ரத்னே ஜே.மனோகர், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வான்மதி வேலுச்சாமி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடாஜலபதி, புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவானந்தம், வடக்கு மாவட்ட செயலாளர் பழ.சிவக்குமார், தலைவர் கவுரிசங்கர், பல்லடம் தொகுதி துணை தலைவர் கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.