தாளவாடி பண்ணை வீட்டுக்கு வந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார்


தாளவாடி பண்ணை வீட்டுக்கு வந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார்
x

தாளவாடி பண்ணை வீட்டுக்கு வந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பாா்க்க ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

தாளவாடி:

ஈரோடு மாவட்டத்தில் தமிழகம்- கர்நாடக மாநில எல்லையில் தாளவாடி மலைப்பகுதி உள்ளது. இங்கு மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீடு ஒன்று உள்ளது. நடிகர் ராஜ்குமார் இறந்த பிறகு அவரது மகன்கள் ராகவேந்திரா ராஜ்குமார், சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் இங்கு வந்து பண்ணை நிலம் மற்றும் விவசாயத்தை கவனித்து வந்தனர். சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் நடிகர் சிவராஜ்குமார் அவ்வபோது பண்ணை வீட்டுக்கு வந்து அதை நிர்வகித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிவராஜ்குமார், தனது நண்பரான டாலி தனஞ்ஜெய் என்ற மற்றொரு கன்னட நடிகருடன் நேற்று தாளவாடியில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்தார். நடிகர் சிவராஜ்குமார் தாளவாடி வந்து உள்ளதை அறிந்ததும் கர்நாடக மாநிலத்தில் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் பகுதியை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் தாளவாடிக்கு படையெடுத்தனர். இதனால் தாளவாடியில் ரசிகர்கள் கூட்டம் குவிந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து ரசிகர்களுடன் நடிகர் சிவராஜ்குமார் படம் எடுத்துக் கொண்டார். அவருடன் சில ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் செல்பியும் எடுத்து கொண்டனர். இதையடுத்து தன்னுடைய தந்தையான நடிகர் ராஜ்குமார் வாழ்ந்த பாரம்பரிய ஓட்டு வீட்டுக்கு நடிகர் சிவராஜ்குமார் சென்றார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தாளவாடி பஸ் நிலையம் வந்து ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பெங்களூரு சென்றார்.


Next Story