கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டுபளியன்குடி மலைப்பாதை சீரமைக்கும் பணி
சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு, பளியன்குடியில் இருந்து கண்ணகி கோவில் வரையிலான 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
கண்ணகி கோவில் திருவிழா
தமிழக- கேரள எல்லை பகுதியில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லையான கூடலூர் நகரின் 21-வது வார்டு பகுதியில் பளியன்குடியிருப்புக்கு மேலே மலை உச்சியில் மங்கல தேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் கேரள மாநில பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கொடியேற்றப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. பழங்காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புனரமைப்பு பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கோவில் சிதிலம் அடைந்து காட்சி அளிக்கிறது. மேலும் இக்கோவிலுக்கு செல்ல தமிழக எல்லையான பளியன்குடியிருப்பு பகுதியில் இருந்து 6.6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை மட்டும் உள்ளது. இந்த பாதை வழியாக நடந்து மட்டும் செல்ல முடியும்.
மலைப்பாதை சீரமைப்பு
இதற்கிடையே கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் பாதை கேரள மாநிலம் குமுளி கொக்கரை கண்டம் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கேரள வனத்துறையினரால் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் வருகிற 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி தமிழக எல்லைப்பகுதி பளியன்குடி மலைப்பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் கூடலூர் வனச்சரகர் முரளிதரன் தலைமையில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். அப்போது கோவில் வளாகம் அருகில் உள்ள தீர்த்த சுனையில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி சுத்தம் செய்தனர். பாதையில் கிடந்த சருகுகள், செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர். இதேபோன்று கேரள மாநில எல்லைப்பகுதியில் வாகனங்கள் செல்லும் பாதையை கேரள மாநில வனத்துறையினரும் சீரமைத்து வருகின்றனர்.