கந்தசாமிபாளையத்தில் சாதி மோதல்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


கந்தசாமிபாளையத்தில்  சாதி மோதல்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை  போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஈரோடு

கந்தசாமிபாளையத்தில் சாதி மோதல்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

சாதி மோதல்

கொடுமுடி அருகே உள்ள கொல்லன்கோவில் கிராம கமிட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கவேல் (வயது 62) தலைமையில், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

கொல்லன்கோவில் கந்தசாமிபாளையத்தில் கடந்த 6-ந்தேதி, லேத் பட்டறை உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் கல்லூரி மாணவர் ஹரிசங்கர் (17) ஆகியோர் கவுரிசங்கர் என்பவர் வீட்டில் சிமெண்ட் அட்டை மாட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஹரிசங்கர் தவறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தால், ஹரிசங்கரின் சமுதாயத்தை சேர்ந்த சிலர், இதுவரை சாதி மத வேறுபாடின்றி அமைதியாக இருந்த எங்கள் கிராமத்தில் சாதி மோதல்களை தூண்டிவிடும் செயல்களையும், உள்ளூர் மக்களை திசை திருப்பி சமூக விரோத செயல்கள் மூலம் பணம் பறிக்கவும், பொய் வழக்கு தொடுத்தும் வருகின்றனர்.

பாதுகாப்பு

இதற்கிடையில் கடந்த 6-ந்தேதி சமூக விரோதிகள் சிலர் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மறுநாளான 7-ந்தேதி இரவு 8.30 மணிக்கு மீண்டும் ஒரு கும்பல் வந்து தாக்குதலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக ராஜ்குமாரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி சிவகிரி போலீஸ் நிலையத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், சம்மந்தப்பட்ட 8-க்கும் மேற்பட்ட நபர்கள் இதற்கு முன்பு எங்களது கிராமத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, எங்கள் கிராமத்தில் பொது அமைதியை சீர் குலைத்து, சாதி மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது கிராமத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தனர்.


Next Story