காப்பகம் மூடப்படும்; நிர்வாகி மீது நடவடிக்கை


காப்பகம் மூடப்படும்; நிர்வாகி மீது நடவடிக்கை
x
திருப்பூர்


3 சிறுவர்கள் பலியானதை தொடர்ந்து திருப்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட காப்பகம் மூடப்படும். காப்பக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீவிவேகானந்த சேவாலய ஆதரவற்றோர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலியானார்கள். 11 சிறுவர்கள் மற்றும் காவலாளி ஆகியோர் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் அவதிப்பட்டனர். அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திருமுருகன்பூண்டியில் உள்ள காப்பகத்துக்கு நேற்று காலை சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.50 ஆயிரம் மற்றும் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி உதவியை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

முதல்-அமைச்சர் வருத்தம்

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீவிவேகானந்த சேவாலய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 3 மாணவர்கள் இறந்துள்ளனர். 11 மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல் காரணமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நல்ல நிலையில் உள்ளனர். இந்த செய்தியை அறிந்ததும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வருத்தமடைந்தார். ஆதரவற்ற, தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று முதல்-அமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து, நான், செய்தித்துறை அமைச்சர், விசாரணை அதிகாரியான மணிவாசன் ஐ.ஏ.எஸ். சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டோம்.

காப்பகத்துக்கு சென்று, மாணவர்கள் இறந்து கிடந்த இடத்தையும் பார்வையிட்டோம். குழந்தைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக அது இல்லை. சிறிய அறையாக பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் கழிப்பிடம் உள்ளது. இரவு நேரத்தில் கழிப்பிடம் செல்ல முடியாமல் சிறுவர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்துள்ளனர். இரவு நேரத்தில் காப்பகத்தில் வார்டன் யாரும் தங்கவில்லை. வார்டன் தங்கியிருந்திருந்தால் சிறுவர்கள் உடனடியாக சொல்லியிருப்பார்கள். ஆனால் யாரும் இல்லாத நிலையில் சிரமம் அடைந்துள்ளனர்.

காப்பகம் மூடப்படும்

அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்காலும், சரியாக கவனம் எடுக்காததால் அந்த 3 சிறுவர்களுக்கு இறப்பு நிகழ்ந்துள்ளது ஆய்வில் கண்கூடாக தெரியவந்துள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாள் ஒரு மாணவரை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மற்ற சிறுவர்களுக்கு காப்பகத்தின் சார்பில் மாத்திரை கொடுத்ததாக சொல்கிறார்கள். இந்த நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் இறப்பு நிகழ்ந்துள்ளது. அதனால் காப்பகம் மூடப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த அனைத்து சிறுவர்களும் ஈரோட்டில் உள்ள அரசு இல்லத்தில் சேர்ப்பதற்கு, சிறுவர்களின் பெற்றோர், உறவினர் ஒத்துழைப்போடு, திருப்பூர், ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இல்லத்தில் சிறுவர்கள் தங்கி படித்து, அரசின் பராமரிப்பில் இருப்பார்கள். கல்லூரி வரை அவர்கள் படிக்க வசதி செய்யப்படும். தொழிற்பயிற்சி அளிக்கப்படும். 21 வயதுக்கு மேலும் அவர்கள் காப்பகத்தில் தங்கி படிக்க விரும்பினால் அதற்கும் முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கி, தொழில் முனைவோராக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காப்பக நிர்வாகி மீது நடவடிக்கை

தி.மு.க.வின் சார்பில் செய்தித்துறை அமைச்சர் நிவாரணத்தொகை வழங்கியுள்ளார். அரசின் சார்பில் நிவாரணத்தொகை வழங்குவது குறித்து கலெக்டர் முன்மொழிவு அரசுக்கு அனுப்பி வைப்பார். அதன்பிறகு முதல்-அமைச்சர் நிவாரணத்தொகை அறிவிப்பார். அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்காலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் காப்பகத்தின் நிர்வாகி மீது குற்ற நடவடிக்கை சட்டப்படி அரசு எடுக்கும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை விசாரித்தோம். காப்பகத்தில் சிறுவர்கள் தங்கும் அறை தகர ஷீட் வேயப்பட்டுள்ளது. காப்பக வளாகத்தில் கான்கிரீட் கட்டிடங்கள் இருந்தும் குறுகலான அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த காப்பகத்தில் ஆய்வு செய்யப்பட்டதா? என்ற கேட்டதற்கு 18-8-2022 காப்பகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம் என்றனர். அதன்பிறகு தொடர் நடவடிக்கை இல்லை. அதனால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தயாரித்த உணவு வாங்கக்கூடாது

திருப்பூர் மாவட்டத்தில் இந்த காப்பகம் போல் மொத்தம் 13 இல்லங்கள் உள்ளன. அனைத்து இல்லங்களிலும் திடீர் ஆய்வு செய்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக உள்ளதா? என்று துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வறிக்கைக்கு பிறகே முடிவு தெரியவரும்.

வெளியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எந்த காப்பகமும் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை கொடுக்கலாம். நன்கொடையாக உணவு வகைகளை வாங்கக்கூடாது. அனைத்து காப்பகங்களுக்கும் உத்தரவிடப்படும். சமைத்த உணவை வாங்க கூடாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு முழுமையாக அனைத்து தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளும். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை அதிகாரியான பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி, கலெக்டர் வினீத், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


Next Story