கறம்பக்குடி, பொன்னமராவதியில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு


கறம்பக்குடி, பொன்னமராவதியில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
x

கறம்பக்குடி, பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடத்தை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் இங்கு நீதிமன்றம் இல்லை. இதனால் கறம்பக்குடி தாலுகா பகுதியை சேர்ந்தவர்கள் ஆலங்குடி நீதிமன்றத்திற்கே செல்லவேண்டி இருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே கறம்பக்குடியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யிலும் செய்தி வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கறம்பக்குடியில் நீதிமன்றம் அமைப்பதற்காக பேரூராட்சி அலுவலகம் அருகே பழைய தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்த சமுதாய கூடம் ரூ.20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் தற்காலிகமாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைய உள்ளது. இதையடுத்து இந்த கட்டிடத்தை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதேபோல் பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக அமையவுள்ள உரிமையியல்- குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற இடத்தினை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொன்னமராவதியில் நிரந்தரமாக நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்காக வலையப்பட்டி விசைத்தறி கூடம், காட்டுப்பட்டி, வேகுப்பட்டி ஊராட்சி இணைப்பு சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரியம் எதிரே மற்றும் தாலுகா அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story