பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
திருவாரூரில் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவாரூரில் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு
தமிழகத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தொடங்கபட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பாலின பாகுபாடு அடிப்படையில், பெண் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுப்பது, பெண் குழந்தை உயிர்வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும், கல்வியையும் உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை ஆகும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட போலீசாா் சார்பில் போலீஸ் நிலைய உட்கோட்டங்களில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.
தற்காப்பு கலை பயிற்சி
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் 20 மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய தற்காப்பு கலை பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. இதையொட்டி திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 20 பேரை தேர்ந்தெடுத்து பாலியல் தொல்லை, வழிப்பறி உள்ளிட்டவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள 1 வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று அந்த பள்ளியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை, சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாலச்சந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பொன்னிவழவன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.