கரடிகுளம் காளியம்மன் கோவில் கொடை விழாவில் 108 திருவிளக்கு பூஜை
கரடிகுளம் காளியம்மன் கோவில் கொடை விழாவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
கழுகுமலை:
கரடிகுளம் காளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கோவில் கொடைவிழா
கரடிகுளம் காளியம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 5.30 மணியளவில் கோவிலில் பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து அம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் கரடிகுளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சுந்தரிதங்கவேலு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வக்குமார், விவசாய அணி ராமச்சந்திரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று காலை 9 மணிக்கு பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இன்று(சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
பயணிகள் நிழற்கூடத்துக்கு அடிக்கல்
மேலும், கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.6½ லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பஞ்சாயத்து துணை தலைவர் ஜோதிசுப்புராஜ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வக்குமார், வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.