கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கான தொடக்கம்- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கான தொடக்கம்- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கான தொடக்கம் என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதே காங்கிரஸ் வெற்றி பெறும் என தெளிவாக தெரிந்தது. கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது. இதனால் தான் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி 4 நாட்கள் தங்கியிருந்து வீதி, வீதியாக பிரசாரம் செய்தார். வேறு எந்த பிரதமரும் செய்யாத பிரசாரத்தை அவர் செய்தார். கர்நாடகாவில் 5 ஆண்டு கால பா.ஜனதாவின் ஆட்சி மிகவும் மோசமாக நடந்தது. ஊழல் ஆட்சியாக நடந்தது. பிரதமர் மோடியாக இருந்தாலும் கர்நாடகாவில் பா.ஜனதா அரசு மக்களுக்கு தேவையானதை செய்யவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரசுக்கு தந்துள்ளது. இந்த தேர்தல் முடிவானது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கான தொடக்கமாகும். எதிர்காலத்தில் மத்தியில் இருக்கிற பா.ஜனதாவுக்கு தோல்விக்கான தொடக்கமாகும். அடுத்ததாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி என்பதற்கு அடையாளமாக காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். குமாரசாமிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டியுள்ளார்கள். கர்நாடக மாநிலத்தில் மகத்தான வெற்றியை காங்கிரஸ் பெற்றிருக்கிறது என்பதற்கு ராகுல் காந்தியின் உழைப்பு, அவர் மேற்கொண்ட பாத யாத்திரை ஆகும். அடுத்ததாக மற்ற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். மத்தியில் உள்ள பா.ஜனதா வீழ்த்தப்படும். பிரதமர் மோடிக்கு இனி இறங்குமுகம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story