கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்;ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேட்டி
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார்.
விட்டுச்சென்ற பணிகள்
ஈரோட்டில் நேற்று முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய பொதுவாழ்வில் சிவாஜி கணேசன், சோனியாகாந்தி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய 3 பேருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை மறக்கமாட்டேன். எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.
ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா சாலை என பெயர் வைத்ததற்கு அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து நிறைவேற்றுவேன். அமைச்சர் முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதிக்கு மட்டும் அல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கர்நாடக தேர்தல்
ஈரோடு பகுதியில் பால் உற்பத்தியை அதிகரித்த எஸ்.கே.பரமசிவம், கோபி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகிய இருவருக்கும் சித்தோடு மற்றும் கோபியில் சிலை வைக்கவேண்டும். இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இத்தனை ஆண்டுகளாக கோபி எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடியவர் ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு செல்ல வேண்டியவராகவே இருக்கும் நிலையில் அங்கு எந்த பணியும் செய்யவில்லை. ஆனால் அமைச்சர் முத்துசாமி ஈரோட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.