கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழக விவசாயிகளை மீண்டும் வஞ்சிக்க தொடங்கிவிட்டது - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழக விவசாயிகளை மீண்டும் வஞ்சிக்க தொடங்கிவிட்டது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம்,
கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழக விவசாயிகளை மீண்டும் வஞ்சிக்க தொடங்கிவிட்டது என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
காவிரி பிரச்சினை
முன்னாள் மத்திய மந்திரியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் எம்.பி. திருப்பரங்குன்றத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்:- காங்கிரஸ் தலைமையிலான கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று டெல்டா விவசாயிகளை மீண்டும் வஞ்சிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை என்பது கண்ணீர் பிரச்சினையாக மாறி இருக்கிறது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநில முதல் மந்திரியிடம் வலியுறுத்த வேண்டும் என்றார்.
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறியதாவது:- த.மா.கா. பா.ஜ.க., காமராஜர் மக்கள் கட்சி ஆகிய கட்சி கூட்டணி இங்கிருந்து புறப்படும். பா.ம.க., தே.மு.தி.க. இந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க.வின் ஊழல் ஆட்சிக்கு எதிராக அண்ணாமலை களம் கண்டு வருகிறார். மாற்று அரசியல் வரவேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க. அரசின் தொடர்ச்சி இந்தியாவிற்கு அவசியம். கொரோனாவிற்கு பிறகு இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகளுக்கு இடையே இந்தியாவுக்கு கிடைத்துள்ள மரியாதை, இதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
மீண்டும் மோடி
கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வேண்டும். அதற்காக மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அதற்கு நாம் தயாராக இருந்தால், தாமரை ஆட்சி தமிழகத்தில் மலரும். இந்தியாவில் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். அதற்காக ஒன்றுகூடுவோம் என்றார்.