சிவன் மலையில் கார்த்திகை மகா தீபம்


சிவன் மலையில் கார்த்திகை மகா தீபம்
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே சிவன் மலையில் பக்தி கரகோஷத்துடன் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே சிவன் மலையில் பக்தி கரகோஷத்துடன் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சிவன் மலையில் தீபத்திருவிழா

கூடலூர் அருகே நம்பாலக்கோட்டை சிவன் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கடந்த 27-ந் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அபிஷேக அலங்கார விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. நேற்று கார்த்திகை மகா தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் சுவாமிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு சிவன் மலை அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மூலவர் சிவலிங்கம் நந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கார்த்திகை மகா தீபம்

பின்னர் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது ஓம் நமசிவாயா என பக்தி கரகோஷமிட்டவாறு பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீபத்திருவிழாவையொட்டி சிவன் மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் நவக்கிரக விளக்குகள் ஏற்றப்பட்டது. பின்னர் உலக மக்கள் நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

இதேபோல் ஓவேலி பேரூராட்சி சூண்டியில் உள்ள ஈசன் மலையில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. ஊட்டி அருகே மஞ்சூர் கீழ்குந்தாவில் ஹெத்தை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. ஹெத்தை அம்மன் கோவில் பூசாரி டி.பி.ராஜன் தீபத்தை கொடுக்க, விநாயகர் கோவில் பூசாரி ராதாகிருஷ்ணன் தீப ஸ்தூபியில் கார்த்திகை தீபத்தை ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



Next Story