கருமாரியம்மன் கோவில் திருவிழா
கோத்தகிரியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
கோத்தகிரி
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது.
7 மணிக்கு கன்னிமார், கருப்பராயர் மற்றும் தன்னாசியப்பர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு தண்ணீர் பள்ளம் விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் பால்குடம் மற்றும் அக்கினி சட்டிகள் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 11.55 மணிக்கு மகா தீபாராதனையும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் கருமாரியம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு வீதி உலா சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். நேற்று காலை 9 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டு மறு பூஜை நடைபெற்றது. இத்துடன் திருவிழா நிறைவடைந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் முழுமதி கருமாரியம்மன் மகளிர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.