தமிழகத்தின் மிக முக்கியமான தலைவர் கருணாநிதிபேனா நினைவு சின்னம் குறித்த கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
தமிழகத்தின் மிக முக்கியமான தலைவர் கருணாநிதி என்று பேனா நினைவு சின்னம் குறித்த கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
நாகர்கோவில்,
தமிழகத்தின் மிக முக்கியமான தலைவர் கருணாநிதி என்று பேனா நினைவு சின்னம் குறித்த கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி
பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத்' என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் ரேடியோவில் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். இந்த உரை நாடு முழுவதும் ரெயில் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
இதே போல நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மனதின் குரல் நிகழ்ச்சியை நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோல நெசவாளர் காலனியில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணல் கொள்ளை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். ஓமலூர் தாலுகாவை சேர்ந்த கிராம நிா்வாக அதிகாாி வினோத்குமார் மீது கொலை முயற்சி நடந்தது. முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மணல் கடத்தல் தடுப்பு அதிகாரிக்கு கூட பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. நேர்மையான அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் மிசா. பா.ஜனதா ஆட்சியில் வருமானவரித்துறை சோதனை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மிசாவின் கொடுமைகளை உதயநிதி ஸ்டாலின் அவரது தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அல்லது ஆற்காடு வீராசாமியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மிசாவையும், வருமான வரி துறையையும் ஒன்று என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பா.ஜனதா மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான சீட்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் தெரியும்.
அதிகாரிகள் அச்சம்
கருணாநிதிக்கு பல முகங்கள் உண்டு. அவருடைய நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். ஒரு பேனா மட்டும் போதும் என்று கூறுவது பேதமை. பேனாவிற்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அவர் மிக முக்கிய தலைவர். இது எனது சொந்த கருத்து.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. பலமுறை குற்றம் சாட்டியும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அச்சம் காரணமாக குமரி மாவட்ட அதிகாரிகள் ஒதுங்கி நிற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.