கருணாநிதியின் 99-வது பிறந்தநாள்: விடுதி மாணவிகளுக்கு மதிய உணவு பரிமாறிய உதயநிதி ஸ்டாலின்


கருணாநிதியின் 99-வது பிறந்தநாள்: விடுதி மாணவிகளுக்கு மதிய உணவு பரிமாறிய உதயநிதி ஸ்டாலின்
x

கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவிகளுக்கு மதிய உணவு பரிமாறினார்.

சென்னை,

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் கீழ் மொத்தம் 1,354 கல்வி விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 86 ஆயிரத்து 514 மாணவ-மாணவிகள் தங்கி பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.

இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு உணவு பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய உணவு பட்டியலின் படி இனிமேல் உணவு வழங்கப்பட உள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் வளாகத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கான அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல தங்கும் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

உணவு பரிமாறினார்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு மதிய உணவு பரிமாறி திருத்தம் செய்யப்பட்ட புதிய உணவு பட்டியலின்படி உணவு வழங்குவதை தொடங்கி வைத்தார். அத்துடன் அங்குள்ள 5 விடுதிகளில் தங்கி பயிலும் 547 மாணவிகளுக்கு தலா ஒரு போர்வையையும் உதயநிதி ஸ்டாலின் இலவசமாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "கொரோனா காலத்தில், நான் பலமுறை ஆய்வு செய்வதற்காக இந்த விடுதிக்கு வந்துள்ளேன். ஆனால், அப்போது மாணவிகள் யாரும் இல்லை. முதன்-முதலாக உங்களை (மாணவிகளை) பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற முறை வரும்போது, இந்த தடுப்பு சுவரை உயர்த்தி கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை என்னிடம் வைக்கப்பட்டது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அது கட்டி முடிக்கப்படும். கருணாநிதியின் பிறந்தநாளை உங்களோடு கொண்டாடுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்" என்றார்.

அரசு அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் அணில் மேஷ்ரம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் ம.மதிவாணன் உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய உணவு பட்டியல்

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் புதிய உணவு பட்டியல் படி, காலை உணவில் சேமியா கிச்சடி, பூரி-மசால், இடியாப்பம்-தேங்காய்ப்பால், நவதானிய தோசை ஆகியவை வழங்கப்பட உள்ளன. மதிய உணவில் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், புதினா சாதம், காரட் சாதம், கறிவேப்பிலை சாதம் உள்ளிட்ட கலவை சாதங்களும், ரசமும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் சாதம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் சப்பாத்தி-குருமா, காய்கறி புலாவ் (பிரிஞ்ச்), ஊத்தப்பம், கோதுமை தோசை, தக்காளி சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளது.

புதன்கிழமைதோறும் இரவில் சாதத்துடன் கறிக்குழம்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய உணவு பட்டியலின்படி 1-வது மற்றும் 3-வது வார புதன்கிழமைகளில் ஆட்டு இறைச்சி, 2-வது மற்றும் 4-வது வார புதன்கிழமைகளில் கோழி இறைச்சி என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதுவும் மதிய உணவில் சாதத்துடன் சேர்த்து வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story