சேலத்தில் கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட்டம் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை
சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம்,
கலெக்டர் மரியாதை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கலெக்டர் கார்மேகம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனைஜா, சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, கலால் உதவி ஆணையர் தனலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகன்நாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் கீதாபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி
இதேபோல், சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் எஸ்.டி. கலையமுதன், உமாராணி, அசோகன், தனசேகர், நிலைக்குழுத்தலைவர்கள் ஜெயகுமார், குமரவேல், சாந்தமூர்த்தி, முருகன், மஞ்சுளா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்களும் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். முடிவில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.