திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்


திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்
x
திருப்பூர்

திருப்பூர்:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொலிவுபெற்று வரும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்

திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று மாலை மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மேயர் தினேஷ்குமார் பொதுத்தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, 'தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் இமயம் போல் உயர்ந்து நிமிர்ந்து நின்று நாமே வியந்து பார்க்கும் நல்ல பல சாதனைகளை படைத்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர். சமூக நீதி காவலர். கலைஞரின் பெயரை நம் திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்துக்கு (பழைய பஸ் நிலையம்) 'முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம்' என பெயர் சூட்டும் தீர்மானத்தை முன்மொழிவாக கொண்டு வருகிறேன் என்றார்.

வரவேற்பு

தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வரவேற்று மேஜையை தட்டினார்கள். மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, இல.பத்மநாபன் ஆகியோர், கருணாநிதியின் சிறப்பை எடுத்துக்கூறி, பஸ் நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டும் தீர்மானத்தை பாராட்டி நன்றி தெரிவித்து பேசினார்கள். பின்னர் கவுன்சிலர் செந்தில்குமார் (காங்கிரஸ்) இந்த தீர்மானத்தை வரவேற்றார். கவுன்சிலர் செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு), நாகராஜ் (ம.தி.மு.க.) ஆகியோர் தீர்மானத்தை வரவேற்று வாழ்த்தி பேசினர்.

கவுன்சிலர் குணசேகரன் (பா.ஜனதா), சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயரை சூட்டலாம் என்றார். விஜயலட்சுமி (காங்கிரஸ்), பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட் வளாகத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்வதாக மேயர் தெரிவித்தார். மேயர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story