கரூர்-கோவை ரோட்டில்: ரூ.137 கோடியில் 26 கிலோமீட்டருக்கு 4 வழிச்சாலை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கரூர்-கோவை ரோட்டில் ரூ.137 கோடியில் 26 கிலோமீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்கப் படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை) பிரதீப்யாதவ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
1,403 கிலோமீட்டர் சாலை
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் மாவட்ட முக்கிய சாலை 376 கிலோ மீட்டர் தூரமும், மாவட்ட இதர சாலைகள் 728 கிலோமீட்டர் தூரம் உள்பட மொத்தம் 1,403 கிலோமீட்டர் தூரம் சாலைகளை தமிழ்நாடு அரசு மூலமாக பராமரித்து வருகிறோம். அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி மேலப்பாளையம் இடையே 2012-13-ம் ஆண்டில் ரூ.13 கோடியே 70 லட்சத்தில் பாலம் கட்டப்பட்டது.
ஆனால் அதற்கு அணுகுசாலை போடாமல் உள்ளது. முதல்-அமைச்சர் அனுமதியை பெற்று அப்பகுதியில் உள்ள 6 கிராமங்களுக்கு இணைக்க வேண்டும். அந்த 6 கிராமங்களிலே நிலம் எடுப்பு எடுக்கப்பட்டு அதிலே சாலை போட வேண்டும் என்ற அடிப்படையிலே இன்றைக்கு துறையின் சார்பில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வேண்டிய நிதிகளை ஒதுக்க டி.பி.ஆர். தயார் செய்யும் பணிகளை செய்து வருகிறோம்.
4 வழிச்சாலை பணி
கரூர் முதல் கோவை வரை தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருக்கின்றது. ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்றது. இதனால் கரூர்-கோவை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற முன்னுரிமை அளித்து, ஓராண்டு காலத்திற்குள் அந்த பணிகள் முடிக்கப்படும்.
இச்சாலையை இரண்டாக பிரித்து கரூர் பகுதியில் ரூ.137 கோடியில், 26 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மீதமுள்ள மேற்கு பகுதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் 2-வது டெண்டர் விடப்படும். கரூர் என்பது இலக்கியத்திலேயே ஒரு புகழ்பெற்ற ஊர். சிலப்பதிகாரத்திலேயே பேசப்பட்டு குறிப்பிட்டு இருக்கிற ஊர் கரூர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
முன்னதாக கலெக்டர் அலுவலகம் அருகே பாளையம் சாலையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, வி.செந்தில்பாலாஜி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சகோ என்ற கையேட்டினை வெளியிட்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிக்கு திறன்பேசியினை வழங்கினர்.
தொடர்ந்து ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றும், போக்குவரத்துத்துறையில் 27 ஆண்டுகள் விபத்து இல்லாமல் பஸ் ஓட்டிய டிரைவருக்கு சான்றும், 108 ஆம்புலன்சில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு சான்றுகளையும் வழங்கினர். பின்னர் திருமாநிலையூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் கட்ட வேண்டிய மேம்பாலம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், தலைமை பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.