கரூர் கலெக்டர் அலுவலக லிப்ட் பழுதால் 10 பேர் சிக்கி தவிப்பு-மூதாட்டி மயக்கம்
கரூரில் கலெக்டர் அலுவலக லிப்ட் பழுதால் சிக்கிய 10 பேரை கதவை உடைத்து தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். இதில் ஒரு மூதாட்டி மயக்கம் அடைந்தார்.
நலத்திட்ட உதவிகள்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை ெதாழிலாளா் நலன் மற்றும் திறன் ேமம்பாட்டுத்துறை, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் சார்பில் பதிவு ெபற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிறைவடைந்ததும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இதனையடுத்து பயனாளிகள் உள்ளிட்டோர் விழா நடைபெற்ற 2-வது மாடியில் இருந்து கீழே இறங்குவதற்காக லிப்டை பயன்படுத்தினர். முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் லிப்டில் 6 பெண்கள் உள்பட 10 பேர் ஏறினர். 2-வது மாடியில் இருந்து தரை தளத்திற்கு வந்து லிப்ட் நின்றது. இதனையடுத்து லிப்டின் கதவை திறக்க முற்பட்டபோது, கதவை திறக்க முடியவில்லை. இதுகுறித்து வெளியில் இருந்தவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து கதவை தட்டினர். மேலும் அவசர கால அலாரத்தையும் ஒலிக்க செய்தனர்.
லிப்ட் பழுது
மேலும், லிப்டுக்குள் இருந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதும், லிப்ட் பழுதாகி செயலிழந்து போய் இருந்தது. நிமிடங்கள் செல்ல செல்ல உள்ளே சிக்கியிருந்தவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர். அப்போது விழாவிற்கு வந்திருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் திரண்டு வந்து லிப்டை திறக்க போராடினார்கள். பெரிய உருட்டுக்கட்டை மற்றும் கம்பிகளை உள்ளே விட்டு நெம்பி பார்த்தனர். ஆனாலும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மூதாட்டி மயக்கம்
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்து, லிப்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு அதில் சிக்கியிருந்தவர்கள் வெளிேய வந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே லிப்டில் இருந்த மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்தார்.இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் தயார்நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மூதாட்டி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் பழுதாகி 10 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.