காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றம்
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மகப்பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மகப்பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகப்பெருவிழா நடைெபறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அபிஷேகங்கள், சிறப்பு பூஜை, தீபாராதனை ஆகியன நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, கோவில் நிர்வாக அதிகாரி முருகன், தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5-ந் தேதி தேரோட்டம்
இந்த திருவிழா வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை, இரவில் சுவாமி- அம்பாள் வீதி உலா வருதல், பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா, கோமதி, நிர்வாக அதிகாரி முருகன், கோவில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.