கத்திரிமலை: அழகிய மலைக்குள் ஒளி கேட்கும் கிராமம்- கரடு முரடான ஒற்றையடி பாதை பயணம்
கத்திரிமலை: அழகிய மலைக்குள் ஒளி கேட்கும் கிராமம்- கரடு முரடான ஒற்றையடி பாதை பயணம்
இயற்கையின் ஓவிய வரிகளுக்குள் உலகம் முழுவதுமே அழகின் சிரிப்பை கொண்டதாகவே இருக்கும். அருகே சென்றால் அக்கரை பச்சை சற்று ஏமாற்றம் அளிக்கும். ஆனால், இயற்கையே தன்னை ரசித்துக்கொள்ளும் வகையில் சில இடங்களை உருவாக்கி வைத்திருக்கும். தமிழ்நாட்டில் மேற்குதொடர்ச்சி மலையின் ஒவ்வொரு குன்றும், வளைவும் அப்படி இயற்கை தன்னையே ரசிக்க உருவாக்கிக்கொண்ட இடங்கள் போன்றே இருக்கும். நமது ஈரோடு மாவட்டத்தில் அப்படி இயற்கை வரைந்த ஓவியத்தில் மிக அழகிய பகுதிகள் பல உண்டு. இந்த இடங்களில் ஒன்று கத்திரிமலை.
ஈரோடு மாவட்டத்தின் கடைசி எல்லை. அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பர்கூர் மலைத்தொடரின் மறுபக்கத்தில் அமைந்து உள்ள குக்கிராமம். கத்திரிமலை கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 1,060 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இங்கு செல்ல வேண்டும் என்றால் 2 வழிகள் உண்டு. அந்தியூரில் இருந்து பர்கூர், சோளகணை வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் காட்டுக்குள் பயணிக்க வேண்டும். அடர்ந்த காடு, 2 மலைகளை ஏறி இறங்கி செல்வதென்றால் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
அதே நேரம் சேலம் மாவட்டம் கொளத்தூர் வழியாக கத்திரிப்பட்டி கிராமத்துக்கு சென்று அங்கிருந்து சென்றால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் கத்திரிமலை உச்சியை அடைந்து விடலாம். இந்த 8 கிலோ மீட்டர் தொலைவில் 6½ கிலோ மீட்டர் தூரம் செங்குத்தான மலைப்பகுதி. ஒரு மலை அல்ல... 3-க்கும் மேற்பட்ட மலைக்குன்றுகளை கடந்து மலை உச்சிக்கு செல்ல வேண்டும். அப்படி சிரமப்பட்டு இந்த மலை உச்சிக்கு ஏன் செல்ல வேண்டும்.
இங்கும் மக்கள் வசிக்கிறார்கள். இப்போது அங்கு வசிப்பவர்களை கேட்டால் எத்தனை தலைமுறைகள் என்று சொல்ல தெரியவில்லை. அத்தனை காலம் இந்த கிராமத்தின் இயற்கையின் கைரேகைகளில் ஒரு கீறலும் ஏற்படுத்தாமல் வசித்து வருகிறார்கள். மொத்தம் 76 குடும்பங்கள். தற்போதைய கணக்கீட்டின் படி 289 பேர் வசிக்கிறார்கள். ஆண்கள் 158 பேர். பெண்கள் 131 பேர் இருக்கிறார்கள். இவர்களின் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் 25 பேர், மாணவிகள் 14 பேர். இவர்கள் தவிர சிலர் உயர் நிலை பள்ளி படிப்புகளுக்காக கிராமத்தை விட்டு சமவெளி பகுதிகளான அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இருக்கிறார்கள்.
இது கத்திரிமலை கிராமத்துக்கு மக்கள் செல்ல வேண்டியதற்கான காரணம். இப்படி மக்கள் வசிக்கும் கத்திரிமலைக்கு எப்படி செல்வது. மலை உச்சிக்கு சாலை இருக்கும். அதுதானே வழக்கம். நமது ஈரோடு மாவட்டத்திலேயே தாளவாடி மலை, பர்கூர் மலை, கடம்பூர் மலை என்று பல மலை உச்சிகளுக்கும் அவை சார்ந்த கிராமங்களுக்கும் சாலைகள் உள்ளன.
இதில் பர்கூர் மலையில் உள்ள பல கிராமங்களுக்கு சமீபத்தில்தான் சாலை அமைக்கப்பட்டது என்றாலும், வாகனங்கள் செல்லும் அளவுக்கு வழித்தடங்கள் இருந்தன. ஆனால், 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒற்றையடிப்பாதைதான் வழித்தடம் என்றால் நம்புவதற்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
கத்திரிமலை கிராமத்துக்கு அந்த கிராமத்து மக்கள் மட்டுமே வழிப்போக்கர்கள். ரேஷன் அரிசி வாங்க வேண்டும் என்றாலும் அவர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவை ஒற்றை ஆளாக நடந்து கடக்க வேண்டும். இதில் ஆண், பெண் என்கிற பேதமில்லை. ஆஸ்பத்திரி செல்ல வேண்டுமா நடந்து சென்று வந்துதான் ஆக வேண்டும். ரொம்ப முடியவில்லை. நடக்கவே முடியவில்லை என்றால் 108 ஆம்புலன்சு வாகனம் வராது. கிராம மக்கள் சேர்ந்து கட்டிலில் தொட்டி கட்டி அந்த ஒற்றையடி பாதையில் தட்டுத்தடுமாறி 8 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வரவேண்டும்.
ஒற்றையடிபாதை என்றால் சமவெளியில் 'போவோமா ஊர்கோலம்' என்று பாட்டுப்பாடிக்கொண்டு செல்லும் பாதையா?. 2 பக்கமும் ஓங்கி வளர்ந்த மரங்கள். ஆங்காங்கே தென்படும் காட்டு விலங்குகள். அருகே செல்லச்செல்ல விரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதை. அது ஒருபக்கம் பாறையின் முகப்பாகவும், இன்னொரு பக்கம் மரங்களின் வேர்களாகவும் இருக்கும். உதவிக்கு ஒரு குச்சியை கையில் வைத்து ஊன்றிப்பிடித்து நடக்க வேண்டும். மலையேறும் பயிற்சிக்காக ஒருநாள் செல்பவர்கள் பாதி தூரம் கூட நடக்க முடியாத கரடு முரடான பாதையில்தான் தினந்தோறும் தடங்கலின்றி நடந்து சென்றனர் கத்திரிமலை மக்கள்...
தொடரும்...